ஆடு புலி ஆட்டம் ஆடுகிறார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்..! - கடம்பூர் ராஜூ
ஆடு புலி ஆட்டம் ஆடுகிறார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்..! - கடம்பூர் ராஜூ
இங்கிலாந்து வாழ் சமுதாய மக்கள் சார்பில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டப்பேரவை எதிர்க்கட்சி பொருளாளராக பணியாற்ற என்னை தேர்ந்தெடுத்துள்ளனர். இது, கோவில்பட்டி தொகுதியில் நான் பெற்ற வெற்றிக்கு அதிமுக அளித்துள்ள அங்கீகாரமாகக் கருதுகிறேன். இதற்காக, தொகுதி மக்கள் சார்பில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை இரு அமைச்சர்கள் உள்ளனர். அதில் ஒருவரான அனிதா ராதாகிருஷ்ணன் தனது அமைச்சர் பதவிக்கு உண்டான வேலையில் ஈடுபடாமல் ஆடுபுலி ஆட்டம் ஆடி, கட்சிக்காரர்களை விலைக்கு வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் ஆகவில்லை. நாங்களும் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தோம். மக்கள் தீர்ப்பின்படி யார் எந்த பொறுப்பில் இருந்தார்களோ அந்த பொறுப்பிலேயே இருந்து பணிகளை செய்ய வேண்டும் என்ற பண்பாட்டோடு இருந்தோம். இதனை மக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர். அரசியல் என்பது ஒரு வட்டம்தான்; அது சுற்றி வரும். அதிமுகவுக்கு யாராலும் சாதி சாயம் பூச முடியாது. இதனை மக்கள் நம்ப மாட்டார்கள்” என்றார்.