மதுரை விமான நிலையத்தால் தென் மாவட்டங்கள் பலன் அடையும் - அமைச்சர்
மதுரை விமான நிலையத்தால் தென் மாவட்டங்கள் பலன் அடையும் - அமைச்சர்
மதுரை விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. ஆய்வுக் கூட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
ஆய்வக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
“மதுரை விமான நிலைய விரிவாக்கம் நீண்ட காலமாகவே தாமதமாக உள்ளது. இதற்காக 615 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும். அரசு புறம்போக்கு நிலம் 150 ஏக்கருக்கு மேல் உள்ளது. மீதி 450 ஏக்கரை, மாநில அரசு கையகப்படுத்தி விமான நிலைய நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும். அதன்பிறகுதான் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
தற்போது 7,500 அடி நீளமே ரன்வே உள்ளது. விரிவாக்கப் பணிகள் நிறைவு பெற்றால் ரன்வே 12,500 அடி நீளமாக நீட்டிக்கப்படும். இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் வைத்துள்ளோம்.
அவரின் ஆலோசனையில் மாவட்ட ஆட்சியர் அந்தப் பணிகளை மேற்கொள்வார். இன்னும் 2 வாரத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடையும். இதற்காக ஒன்றிய அரசிடம் நிதி பெறுவதற்கும், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் விமானத்துறை அமைச்சரிடம் வைத்துள்ளோம்.
தற்போது சிங்கப்பூர் போன்ற ஒருசில நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டாலும், சுங்க விமான நிலையமாக மட்டுமே மதுரை விமான நிலையம் செயல்படுகிறது. அதை முழு அளவில் சர்வதேச விமான நிலையமாக மாற்றினால் இன்னும் கூடுதலாக வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வரும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் விரிவாக்கப் பணிகளை முடித்து, சர்வதேச விமான நிலைய அந்தஸ்தைப் பெற்றால் தென் மாவட்டங்கள் மிகப்பெரிய பலன் அடையும் என்று எதிர்பார்க்கிறோம்''
இவ்வாறு அவர் கூறினார்.