நகைக்கடன் தள்ளுபடி.. எதிர்க்கட்சி தலைவருக்கு அமைச்சர் பெரியசாமி பதில்..!

நகைக்கடன் தள்ளுபடி.. எதிர்க்கட்சி தலைவருக்கு அமைச்சர் பெரியசாமி பதில்..!

Update: 2022-01-07 11:10 GMT

சட்டப்பேரவையில் நேற்று நடந்த விவாதத்தின்போது, “திமுகவின் தேர்தல் அறிக்கையில் நகைக்கடன் தள்ளுபடி குறித்து அறிவிக்கப்பட்டது. அப்போது எந்த நிபந்தனையும் அறிவிக்கவில்லை. திமுக தேர்தல் அறிக்கை, அக்கட்சி தலைவரின் வாக்குறுதியை நம்பி, பலரும் கடன் பெற்று செலவு செய்து விட்டனர்.

இப்போது, 35 லட்சம் பேருக்கு நகைக்கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த 'நோட்டீஸ்' அனுப்பப்படுகிறது” என, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது; “5 சவரன் நகைக்கடன் பெற்ற 13 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5 சவரனுக்கு மேல் ஏழு லட்சம் பேர் நகைக் கடன் பெற்றுள்ளனர். ஒரே ரேஷன் அட்டை, ஒரே ஆதார் அட்டையைக் காட்டி நூற்றுக்கணக்கானோர் கடன் பெற்றுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு அல்லது ஐந்து பேர், 30க்கும் மேற்பட்ட இடங்களில் கடன் பெற்றுள்ளனர். மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றும் கடன் வாங்கியுள்ளனர். இதற்கு தள்ளுபடி தர முடியுமா..?

திருவண்ணாமலையை சேர்ந்த ரத்தன்லால் என்பவர், ஒரே ஆதார் கார்டை வைத்து 762 கடன் வாங்கியுள்ளார். ஆரணி, ராமநாதபுரம் கொடிகுளம், புதுக்கோட்டை கீரனூர் ஆகிய இடங்களில் போலி நகைகளைக் காட்டி கடன் பெறப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்க தலைவர்கள், ஊழியர்கள், அடகுதாரர்கள் கூட்டணி அமைத்து கடன் பெற்றுள்ளனர். இப்படி, மொத்தம் 21 லட்சம் பேர் கடன் வாங்க குறுக்கு வழியை கையாண்டுள்ளனர்; அவர்களுக்கு தள்ளுபடி கிடையாது” எனத் தெரிவித்தார்.

Similar News