அம்மா வீட்டு வேலைக்காரி சசிகலா..! - சி.வி.சண்முகம் சாடல்
அம்மா வீட்டு வேலைக்காரி சசிகலா..! - சி.வி.சண்முகம் சாடல்
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பின்பு கட்சி ஆதரவாளர்கள், நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசி வருகிறார்.
இந்த ஆடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், அதிமுக நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசிய சசிகலா, “நான் ஒதுங்கி இருந்தால் ஜெயிச்சிடுவோம்னு சொன்னாங்க. அதனால்தான் ஒதுங்கி இருந்தேன். ஆனால் இப்போ அம்மாவோட ஆட்சி போயிருச்சு; அதனால் நான் திரும்ப வரேன்” என்று கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, “சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர், ஆயிரம் பேருடன் தொலைபேசியில் பேசினாலும் எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. எங்களுடன் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சசிகலா ஆடியோ விவகாரம் குறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “சசிகலா என்பவர் யார்..? அவர் அம்மா வீட்டில் வேலைக்காரராக இருந்தார். வேலை முடிந்ததும் அவர் சென்றுவிட்டார். அவருக்கும் அதிமுக கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிமுக யார் தயவிலும் இல்லை” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.