எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும் முடிவை கைவிட்டார் முன்னாள் ஒன்றிய அமைச்சர்!!
எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும் முடிவை கைவிட்டார் முன்னாள் ஒன்றிய அமைச்சர்!!
ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராக கடந்த 8 மாதங்களாக பதவியில் இருந்தவர் பாபுல் சுப்ரியோ. ஆனால், சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இது தொடர்பாக முகநூலில் ஒரு நீண்ட பதிவை எழுதிய அவர், கடந்த சில நாட்கள் முன்பு அரசியலில் இருந்து விலகும் முடிவை பற்றி அமித்ஷா மற்றும் ஜேபி நட்டாவுக்கு அறிவித்ததாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “என்னை பல வழிகளில் ஊக்கப்படுத்தியவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்கள் அன்பை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். நான் ஏன் அரசியலை விட்டு விலகினேன் என்ற கேள்வி எழும்? அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்றால் ஆம். ஓரளவுக்கு தொடர்பு இருக்கிறது.
2014 மற்றும் 2019 க்கு இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இன்று மேற்கு வங்கத்தில் பாஜக முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. தேர்தலுக்கு முன்பு மாநில தலைமைக்கு சில பிரச்சினைகள் இருந்தன. அதில் தப்பில்லை. ஆனால் அவற்றில் சில பொது வெளிக்கு வருகின்றன. நான் அமைதியை விரும்புகிறேன்.” எனத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே இந்த அறிவிப்பு ஒரு நாடகம் என திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் அழைப்பின் பேரில் அவரை சந்தித்த பின்னர் தமது முடிவை பாபுல் சுப்ரியோ மாற்றியுள்ளார்.