இந்தாண்டு நேரடி முறையில் நடைபெறும் நீட்.. தேர்வு தேதியும் அறிவிப்பு !!

இந்தாண்டு நேரடி முறையில் நடைபெறும் நீட்.. தேர்வு தேதியும் அறிவிப்பு !!

Update: 2021-07-07 06:45 GMT

2021ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 5ஆம் தேதி நேரடியாக நடத்தப்படும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வு முகமை சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, கொரோனா பரவலால் கடந்த ஆண்டு நீட் தேர்வு பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் செப்டம்பர் 13ஆம் தேதி நடத்தப்பட்டது.

அதேநிலை இந்தாண்டும் ஏற்பட்டது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நீட் தேர்வு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. மே 1ஆம் தேதி தொடங்கப்பட வேண்டியிருந்த முன்பதிவும் தொடங்கப்படவில்லை.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டன. சிஐஎஸ்சிஇ வாரியமும் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்தது. இதனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 5ஆம் தேதி நடத்தப்படும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.


இதுகுறித்து தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2021ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 5ஆம் தேதி நடத்தப்படும். பேனா, காகித முறையில் இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் தேர்வு நடைபெறும். தேர்வு, பாடத்திட்டம், வயது வரம்பு, இட ஒதுக்கீடு, தேர்வுக் கட்டணம், தேர்வு மையங்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தொடர்ந்து இந்தத் தளத்துடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உள்பட பல்வேறு  மாநிலங்களில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:    

Similar News