தேன் நிலவு காலத்தில் புதுமணப் பெண் கொடூர முடிவு.. உயிர் தப்பிய புதுமாப்பிள்ளை.. விசாரணையில் பகீர் தகவல்
தேன் நிலவு காலத்தில் புதுமணப் பெண் கொடூர முடிவு.. உயிர் தப்பிய புதுமாப்பிள்ளை.. விசாரணையில் பகீர் தகவல்
திருமணமான 22வது நாளில் கணவரைக் கொலை செய்ய புதுமணப்பெண் கூலிப்படையை ஏவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் குரங்குமாயன் பகுதியைச் சேர்ந்தவர் கவுதம் (24). கேபிள் டிவி ஊழியரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி (21) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த மாதம் 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
ஆனால், இந்த மகிழ்ச்சி சில நாட்கள் மட்டுமே நீடித்தது. அதாவது, கடந்த 8ஆம் தேதியன்று புதுப்பெண் புவனேஸ்வரி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெரும் அதிர்ச்சி நிலவி இரு வீட்டாரும் உறைந்துபோயினர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. போலீசார் விசாரணையில், புவனேஸ்வரிக்கு தொடக்கத்தில் இருந்தே கணவர் கவுதமை பிடிக்கவில்லை. தானும் வெளியில் சென்று வேலை செய்ய வேண்டும் என்று விரும்பினார்.
இதற்கு தீர்வுகாண யோசித்த புவனேஸ்வரி இறுதியாக கணவர் கவுதமை கொலை செய்ய திட்டமிட்டார். போலீஸ் தேர்வுக்கு பயிற்சி எடுத்த போது, நிரஞ்சன் (22) என்பவருடன் பழகி இருந்தார். இந்தநிலையில் புவனேஸ்வரி தனது நகையை வங்கியில் அடகு வைத்து ரூ.75 ஆயிரம் வாங்கினார். பின்னர் அந்த பணத்தை நிரஞ்சனிடம் கொடுத்து, தான் கணவரை காரை ஏற்றுக் கொல்ல சதி திட்டம் போட்டார்.
இதன்படி திருமணமான 22ஆவது நாளில், அதாவது கடந்த 2ஆம் தேதி புவனேஸ்வரி தனது கணவரை ஸ்கூட்டரில் வெளியில் அழைத்து வந்தார். அவர்கள் சாலையில் சென்றப்போது புவனேஸ்வரி ஒதுங்கிக்கொண்ட நிலையில், அப்போது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று கவுதமின் ஸ்கூட்டர் மீது மோதியது. எனினும் இந்த விபத்தில் அவர் உயிர் தப்பினார். பின்னர் காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் கவுதமை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் காரில் ஏறி தப்பி சென்று விட்டனர்.
இதையடுத்து காரின் கேரள பதிவெண்ணை அடிப்படையாக வைத்து, கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் கவுதம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிய கார் மற்றும் 5 பேர் கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இது, புவனேஸ்வரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கணவரை கொலை செய்ய தான் திட்டம் போட்டது போலீசுக்கு தெரிந்து விடும் என்று அவர் அச்சம் அடைந்தார். இதையடுத்து புவனேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே கவுதம் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், புவனேஸ்வரிக்கு ஏற்கனவே பழக்கமான நிரஞ்சன், அவரது நண்பர்களான கோவிந்தன்பட்டியை சேர்ந்த மனோஜ் (20), சத்யா (21), பிரதீப் (37) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கூலிப்படை போல செயல்பட்டு இருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
திருமணமான 22வது நாளில் கணவரை கொலை செய்ய மனைவியும், அது தோல்வியில் முடிந்ததால் தற்கொலை செய்துக்கொண்டதும் அப்பகுதி மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
newstm.in