இனி வார இறுதி ஊரடங்கு இல்லை.. விரைவில் வெளியாக உள்ளது அறிவிப்பு..!
இனி வார இறுதி ஊரடங்கு இல்லை.. விரைவில் வெளியாக உள்ளது அறிவிப்பு..!
தலைநகர் டில்லியில் வார இறுதி நாட்களில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்துள்ளது. நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்கள் இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது.
அந்த வகையில், தலைநகர் டில்லியில் தற்போது வார இறுதி ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மேலும், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..
இந்நிலையில் டில்லியில் அமலில் உள்ள வார இறுதி ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.
அதன்படி, தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கவும், கடைகள் மற்றும் வணிக வளாகங்களை திறக்கவும் முதல்வர் முடிவு செய்துள்ளார்.
இதற்கான பரிந்துரைகளையும் அவர் துணைநிலை ஆளுநருக்கு கடிதமாக அனுப்பி உள்ளார். கொரோனா பாதிப்பு குறைந்ததால் கட்டுப்பாடுகளை தளர்த்தும் தனது முடிவை அவர் ஆளுநருக்கு அனுப்பி உள்ளார்.
முதல்வரின் பரிந்துரைகளை ஆளுநர் ஏற்கும் பட்சத்தில் டில்லியில் விரைவில் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,306 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 43 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.