2021ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக அதில் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக பிசிசிஐ ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, 20 ஓவர் உலகக்கோப்பையை இந்தியாவிலேயே நடத்த முடியுமா என்பது குறித்து முடிவெடுக்க இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஜூன் 28ஆம் தேதிவரை (இன்று) அவகாசம் வழங்கியிருந்தது.

இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் இருந்து ஐசிசிக்கு உரிய பதில் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் 2021 டி20 உலக கோப்பை தொடர் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், கொரோனா காரணமாக இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்ட இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரை, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றலாம். நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்துவருகிறோம். வீரர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் எங்களுக்கு மிக முக்கியமானவை என தெரிவித்தார். இந்த தகவலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இன்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இந்த தொடரை எப்போது நடத்துவது என்ற முடிவை ஐசிசி எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். உத்தேசமாக அக்டோபர் முதல் நவம்பருக்குள் உலக கோப்பை தொடர் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் 2021 சீசனில் விடுபட்டுள்ள போட்டிகளையும் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 

உலக கோப்பை தொடரை அமீரகத்தில் நடைபெற்றாலும் இந்த தொடரை ஹோஸ்ட் செய்வது இந்தியாதான் என ஐசிசி முன்னதாக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

newstm.in


 

Tags: