‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’.. உற்சாகமாக நடந்த போகி !!

‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’.. உற்சாகமாக நடந்த போகி !!

Update: 2022-01-13 08:00 GMT

‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற அடிப்படையில், புதுமையை வரவேற்கும் விதமாக ஆண்டுதோறும் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த வகையில் இந்தாண்டு இன்று போகி கொண்டாடப்பட்டது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையிலேயே மக்கள் தங்கள் வீடுகள் முன்பு பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி, போகிப் பண்டிகையை கொண்டாடினர்.

பயனற்ற பழைய பொருட்களை எரித்த போது, போகி மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாகம் அடைந்தனர். இதனிடையே, ரப்பர் பொருட்கள், பழைய டயர் போன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை எரிக்க வேண்டாம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளதால், அந்த பொருட்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

அதாவது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போகியன்று விதிமுறைகளை மீறி டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் எரிக்க கூடாது என்றும் மீறினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது. அனைத்து மண்டலங்களிலும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.  

இந்நிலையில், சேலம், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் போகி பண்டிகையை ‘காப்புக்கட்டு’ என்று கொண்டாடுவது வழக்கம். அதன்படி, வீட்டின் முற்றம், வைக்கோல் போர், உள்ளிட்ட பகுதிகளில் வேப்பிலை கொத்து, சிறுகண்பீலை பூ, ஆவாரம் பூ கொத்து ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து செறுகி வைத்து கொண்டாடி மகிழ்கின்றனர்.


newstm.in

Similar News