சென்னையில் நுழைந்தது ஒமைக்ரான் பாதிப்பு.. முதல்முறையாக ஒருவருக்கு உறுதி.. இரவில் அமைச்சர் கொடுத்த அப்டேட் !!

சென்னையில் நுழைந்தது ஒமைக்ரான் பாதிப்பு.. முதல்முறையாக ஒருவருக்கு உறுதி.. இரவில் அமைச்சர் கொடுத்த அப்டேட் !!

Update: 2021-12-16 06:00 GMT

தமிழ்நாட்டில் முதல்முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. முதலில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் டாக்டர் உள்பட 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா, ஆந்திரா, சண்டிகர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரானின் பாதிப்பு ஏற்பட்டது.  

இந்நிலையில் தமிழகத்திலும் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்துள்ளது. நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த பயணி ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார். லேசான ஒமைக்ரான் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருடன் தொடர்பில் இருந்த மேலும் 7 பேருக்கும் புதிய வகை கொரோனா இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவர்களின் மாதிரியும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தவிர வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார். 

இதனிடையே, தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு தொற்று உறுதியானது. மகாராஷ்டிர மாநிலத்தில் மேலும் 4  நபர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பாதிப்பு 32 ஆக உயர்ந்துள்ளது.  
 

newstm.in

Similar News