#BIGNEWS:- ஒமைக்ரான் சமூகப் பரவலாக மாறிவருகிறது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!
#BIGNEWS:- ஒமைக்ரான் சமூகப் பரவலாக மாறிவருகிறது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!
தமிழகத்தில் சமூகப் பரவலாக ஒமைக்ரான் மாறிவருவதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் பரவல் அதிகம் உள்ள 10 மாநிலங்களுக்கு நிபுணர் குழுவை மத்திய அரசு அனுப்பியது. இதன்படி, தமிழகத்துக்கு டாக்டர் வனிதா, பூர்பசா, சந்தோஷ்குமார், தினேஷ் பாபு ஆகியோர் வருகை தந்துள்ளனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் மற்றும் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். மாவட்ட வாரியாக சுகாதாரத்துறை இணை இயக்குநர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, தேனாம்பேட்டையில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடம், கட்டளை மையம், தடுப்பூசி சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றை நிபுணர்கள் பார்வையிட்டனர். பின்னர், கூடுவாஞ்சேரி சென்ற குழுவினர், தடுப்பூசி மையம், கொரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் பரிசோதனைக்கான ஏற்பாடுகள், கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை வசதிகள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர். மத்திய குழுவினர் இன்னும் இரண்டு நாட்கள் ஆய்வு செய்வார்கள் என்று மருத்துவத் துறையினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 97 பேருக்கு ஒமைக்ரான் தொற்றுக்கான மரபணு மாற்றம் கண்டறியப்பட்டிருப்பதாகவும், ஒமைக்ரான் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் பாதிக்கப்பட்டவர் டிஸ்சார்ஜ் ஆகும் நிலை இருப்பதாகவும் கூறினார். ஒமைக்ரான் தொற்றை உறுதிசெய்ய தமிழகத்தில் உள்ள மரபியல் ஆய்வுக்கூடத்தை பயன்படுத்த அனுமதிக்குமாறு மத்திய குழுவினரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.