ஒமைக்ரான் பரவல்… மூன்றாவது அலை ஏற்படுமா..?: உலக சுகாதார நிறுவனம் பதில்..!

ஒமைக்ரான் பரவல்… மூன்றாவது அலை ஏற்படுமா..?: உலக சுகாதார நிறுவனம் பதில்..!

Update: 2021-12-13 18:35 GMT

புதிய உருமாறிய 'ஒமைக்ரான்' வகை கொரோனா வைரஸ் இந்தியா உட்பட உலகின் 59 நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் டில்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் ஒமைக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சண்டிகர், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் வகை தொற்று நேற்று உறுதியானது. இதையடுத்து நம் நாட்டில் உருமாறிய வகை தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. ஒமைக்ரான் வகை தொற்று பரவலால் நம் நாட்டில் மூன்றாவது அலை உருவாக வாய்ப்புள்ளதா என்ற அச்சம் நிலவி வருகிறது.


இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் கூறியதாவது: “பெருந்தொற்று நம்மை விட்டு இன்னும் விலகவில்லை. பல்வேறு நாடுகளிலும் ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்துள்ளது அச்சத்தை அதிகரித்துள்ளது.

புதிய உருமாறிய வைரசால் மிகவும் மோசமான விளைவுகள் ஏற்படாவிட்டாலும், நிச்சயமற்ற நிலையை அது உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. பலமுறை உருமாற்றம் அடைந்ததாலும் உலக நாடுகளில் வேகமாக பரவி வருவதாலும், ஒமைக்ரான் வைரசின் சில கூறுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

ஆனால் அது எந்த மாதிரியான பாதிப்பாக இருக்கும் என்பதை கணிப்பது கடினம். இதை முழுமையாக அறிவதற்காக ஒமைக்ரான் பாதிப்புள்ள நாடுகளிடம் இருந்து தரவுகளை பெற்று, அதை ஆய்வு செய்யும் பணியில் ஆயிரக் கணக்கான ஆய்வாளர்களை உலக சுகாதார நிறுவனம் ஈடுபடுத்தி உள்ளது.

இதன் பரவும் தன்மை, தொற்று தீவிரம், மீண்டும் தொற்று ஏற்படுத்த கூடிய ஆபத்து ஆகியவை குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. தென் ஆப்பிரிக்காவில் இருந்து கிடைத்த தரவுகளை ஆய்வு செய்தபோது, ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களை ஒமைக்ரான் வகை மீண்டும் தாக்க கூடிய வாயப்புகள் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. இதை இறுதி முடிவாக எடுத்துக் கொள்ள முடியாது” என அவர் கூறினார்.

Similar News