ஒமைக்ரான் பரவல்.. பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா..?: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!

ஒமைக்ரான் பரவல்.. பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா..?: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!

Update: 2021-12-07 10:38 GMT

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில்,  இந்தியாவில் பரவி வரும் ஒமைக்கரான் வைரஸ் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா..? என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

‘ஒமைக்ரான் குறித்து பதற்றம் அடைய வேண்டாம். முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை பொதுமக்கள் தீவிரமாக பின்பற்ற வேண்டும்’ என்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “ஒமைக்ரான் தொடர்பாக பொது சுகாதாரத்துறையிடம் இருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வரவில்லை.

பொதுவாக, பொதுமுடக்க தளர்வை அமல்படுத்தும்போது மருத்துவ ஆலோசனைக் குழுவை தமிழக முதல்வர் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது வழக்கம். அடுத்து வருகிற பொதுமுடக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஒமைக்ரான் குறித்து விவாதிக்கப்படும். இதில், எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் செயல்படுத்தப்படும்” என்றார்.

Similar News