ஒமைக்ரான் அச்சுறுத்தல்.. பள்ளிகளை மூடுங்க: பெற்றோர் கோரிக்கை..!

ஒமைக்ரான் அச்சுறுத்தல்.. பள்ளிகளை மூடுங்க: பெற்றோர் கோரிக்கை..!

Update: 2021-12-15 15:56 GMT

நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூடிவிட்டு ஆன்லைனில் பாடங்களை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது, கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அவதாரமான ஒமைக்ரான் வைரஸ் புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது குறித்து விளக்கம் அளித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் வதந்தி” என்று விளக்கம் அளித்தார்.

இதற்கிடையே கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அண்டை மாநிலங்களின் எல்லை கண்காணிப்பை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூடி விட்டு, ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை நடத்த வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News