அச்சச்சோ... நாடு முழுவதும் லாரிகள் ஸ்ட்ரைக் அபாயம்! எகிறப் போகும் விலைவாசி!

அச்சச்சோ... நாடு முழுவதும் லாரிகள் ஸ்ட்ரைக் அபாயம்! எகிறப் போகும் விலைவாசி!

Update: 2021-02-16 11:02 GMT

பெட்ரோல் விலை வரலாற்றில் முதல் முறையாக 100 ரூபாயைத் தொட்டிருக்கிறது. தினம் தினம் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருப்பது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரக்கு வாகனங்களை இயக்குபவர்களின் துயர் சொல்லி மாளாது. இன்னொரு பக்கம் ஒரே மாதத்தில் இரண்டு, மூன்று முறைகள் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்படுகிறது. வணிகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் மார்ச் 1ம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

டீசல் விலை உயர்வு, வரி அதிகரிப்பு, 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை அழிக்கும் கொள்கை என லாரி உரிமையாளர்கள் கடுமையான நெருக்கடியில் உள்ளனர். தற்போது டீசல் விலை நாளுக்குநாள் அதிகரித்து அச்சுறுத்தி வருகிறது.

எனவே இவற்றுக்கு எல்லாம் தீர்வு காண வேண்டும் என அனைத்து இந்திய மோட்டார் வாகன கூட்டமைப்பினர் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 14 நாட்களில் தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காணாவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக எச்சரித்துள்ளனர்.

அனைத்து இந்திய மோட்டார் வாகன கூட்டமைப்பில் 95 லட்சம் டிரக்குகள், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன. டீசல் விலையை குறைத்து, இ-வே பில் முறையில் சிக்கல்களைத் தீர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே போல் 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை அழிக்கும் கொள்கை குறித்து தங்களுடன் ஆலோசிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

ஏற்கனவே விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர் கொண்டு வரும் சூழலில் லாரி ஓடவில்லை என்றால் விலைவாசி மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:    

Similar News