மக்கள் வரிப்பணத்தில் இருந்து இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய உத்தரவிடகோரி உச்ச நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தேர்தல் வந்தாலே அதை தருகிறோம் இதை தருகிறோம் என ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் போட்டி போட்டு அறிவிக்கிறது. ஆனால் அவை அணைத்தும் மக்கள் வரிபணத்தில் இருந்தே வழங்கப்படுகிறது. மக்களும் இலவசம் என ஆர்வத்தோடு வாங்கிக்கொள்கின்றனர். இந்த முறை மாறவேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். 

இந்த நிலையில், வழக்கறிஞர் அஷ்வினி குமாா் உபாத்யாய என்பவர் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தோ்தல் வரும்போது வாக்காளா்களை கவரும் வகையில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. இது ஜனநாயக மதிப்பீடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதோடு, அரசியல் சாசன நடைமுறைகளையும் கடுமையாக பாதிக்கிறது.

இந்த நடைமுறை அரசியல் கட்சிகள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாக்காளா்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற செயலாகும். ஜனநாயக நடைமுறைகளை பாதுகாக்க இதுபோன்ற நடைமுறைகள் தவிா்க்கப்பட வேண்டும்.

இதற்காக, தோ்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதை தடை செய்யும் கட்டுப்பாடுகளை, மாநில கட்சியாக அங்கீகாரம் அளிப்பதற்கான தோ்தல் சின்ன ஒதுக்கீடு உத்தரவு 1968-ல் தோ்தல் ஆணையம் சோ்க்க உத்தரவிட வேண்டும். 

தோ்தலுக்கு முன் பொது நிதியில் இருந்து இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பது வாக்காளா்களின் சமநிலையை பாதிக்கிறது. தோ்தல் நடைமுறையின் தூய்மையை கெடுக்கிறது.  

நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தலில் ஒரு கட்சி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்குவோம் என அறிவிக்கிறது, மற்றொரு கட்சி இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை அறிவிக்கிறது. பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலுக்காக ஏகப்பட்ட இலவச வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. 

ஆனால், பஞ்சாப் அரசால் ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் கூட வழங்க முடியவில்லை. ஏற்கனவே அம்மாநிலத்திற்கு ரூ.77,000 கோடி கடன் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கடன் மேலும் அதிகரிக்கிறது. இதில் இலவசங்களை எப்படி தர முடியும் என கேள்வியோடு அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

Tags: