பகீர் புகார்! ஈபிஎஸ், ஓபிஎஸ் கார் மீது தாக்குதல்!?
பகீர் புகார்! ஈபிஎஸ், ஓபிஎஸ் கார் மீது தாக்குதல்!?
சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது ஓபிஎஸ், ஈபிஎஸ் கார்களின் மீது காலணி, கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மாறன் என்பவர் அதிமுக அம்மா பேரவை துணை செயலாளராக உள்ளார். இவர் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் காமராஜர் சாலைக்கு வந்தனர். அப்போது தானும் மலரஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினேன்.
அப்போது அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தூண்டுதலின் பேரில், அமமுக பொறுப்பாளர்கள் மற்றும் சிலர் சட்ட விரோதமாக கையில் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்துவதற்காக ஓபிஎஸ், ஈபிஎஸ் வாகனங்களை மறித்து முற்றுகையிட்டனர்.
மிகவும் மோசமான வார்த்தைகளால் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் பெயர்களைச் சொல்லி, கூச்சலிட்டு ஆவேசமுடன் முழக்கமிட்டுக் கொண்டே கற்களையும், காலணிகளையும், கட்டைகளையும், கம்புகளையும் கொலை வெறியோடு வீசினார்கள்.
அதில், சில கற்களும், செருப்புகளும், கட்டைகளும் என் மேல் விழுந்தது. அதில், எனக்கு இடது தோல் பட்டையில் காயம் ஏற்பட்டது. என்னுடன் வந்த செங்கல்பட்டு மேற்கு எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் ராஜப்பா அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது.
எனவே, மேற்படி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்று திட்டமிட்டு, சதித் திட்டம் தீட்டி, பயங்கர ஆயுதங்களுடன் ஒன்று கூடி, ஆபாச வார்த்தைகளுடனும், ஆவேசமாக கொலைவெறி தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in