சிறுமியின் செல்போனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி.. தமிழ் ஆசிரியர் போக்சோவில் கைது !
சிறுமியின் செல்போனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி.. தமிழ் ஆசிரியர் போக்சோவில் கைது !
பள்ளி மாணவிக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச செய்தி அனுப்பிய தமிழ் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரட்டுமடம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தமிழாசிரியராக அசோக்குமார் (37) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், அதே பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. அதாவது மாணவியின் செல்போன் எண்ணை பெற்ற ஆசிரியர், வாட்ஸ்அப்பில் ஆபாச தகவல்களை அனுப்பியுள்ளார். மேலும் ஆபாசமாகவும் அவர் பேசிவந்துள்ளார்.
மேலும் இதனை வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்றும் ஆசிரியர் கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் சிறுமி, யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், அச்சிறுமியின் குடும்பத்தினர் செல்போனை எடுத்து பார்த்தபோது தமிழாசிரியர் சிறுமிக்கு குறுஞ்செய்தி அனுப்பியதை கண்டு அதிர்ந்து போயினர். இது குறித்து கடந்த 04ஆம் தேதியன்று குழந்தைகள் உதவி எண்ணான 1098 புகார் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கதிர்வேல் உடுமலைப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், ஆசிரியர் அசோக்குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தனர். விசாரனையில் அவர் மாணவியிடம் ஆபாசமாக பேசிவந்ததும் தனிபட்ட முறையில் அவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பி பேசிவந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஆசிரியர் அசோக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த உடுமலை மகளிர் காவல்நிலைய போலீசார், அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்
newstm.in