பெகாசஸ் விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!!

பெகாசஸ் விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!!

Update: 2022-01-30 20:19 GMT

பெகாசஸ் உளவு மென்பொருளை இந்தியா வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில்  புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெகாசஸ் உளவு மென்பொருளை இந்தியா வாங்கியது தொடர்பாக அமெரிக்காவின்தி நியூயார்க் டைம்ஸ்நாளேடு சில தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியா-இஸ்ரேல் இடையே மேற்கொள்ளப்பட்ட 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா கடந்த 2017ஆம் ஆண்டு பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டு ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, 8 வாரங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில்  பெகாசஸ் உளவு மென்பொருள் வாங்கியது குறித்து விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில்  வழக்கறிஞர் எம்.எல்.சர்மா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், இந்தியா-இஸ்ரேல் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படவில்லை, எனவே ரத்து செய்து பணத்தை மீட்டெடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரிமினல் வழக்கைப் பதிவு செய்வதற்கும், பெகாசஸ் மென்பொருள் கொள்முதல் ஒப்பந்தம் மற்றும் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒப்பந்தத்தை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்

newstm.in

Similar News