மக்களிடம் விழிப்புணர்வு இல்லை.. கொரோனா 3ஆவது அலை அடுத்த 6 ஆவது வாரத்தில் தாக்கும்?
மக்களிடம் விழிப்புணர்வு இல்லை.. கொரோனா 3ஆவது அலை அடுத்த 6 ஆவது வாரத்தில் தாக்கும்?
கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை அடுத்த 6 முதல் 8 ஆவது வாரங்களில் தொடங்கும் என எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார். மேலும் மக்களுக்கு அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான என்டிடிவி தொலைக்காட்சிக்கு எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பொதுமுடக்கத்தில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்கள் எவ்வித பாடமும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை என கூறினார்.
பல இடங்களில் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிப்பதில்லை, முகக்கவசம் அணிவதில்லை. அதனாலேயே மூன்றாவது அலையை நாடு எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியான நிலை எழலாம். இரண்டாவது அலையின் தாக்கத்தில் இருந்து தற்போது நாடு மீண்டு வருகிறது, இரண்டாவது அலையின்போது தினசரி தொற்று பாதிப்பு 4 லட்சத்துக்கும் அதிகமாகவும், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும் கண்டது. இரண்டாவது அலைகளின் போது பல மாநிலங்கள் ஆக்ஸிஜன், மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை, மருந்து பொருள்கள் மற்றும் தடுப்பூசிகள் பற்றாக்குறையை சந்தித்தன.
இந்த நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக செல்வதால் மீண்டும் தொற்று அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் நாட்டில் மூன்றாவது அலையை சந்திக்கக் கூடிய நெருக்கடியான நிலை உருவாகும். இப்போதே அதன் பாதிப்பு ஆரம்பித்திருக்கலாம் என்றே கருதுகிறேன் என அவர் அச்சம் தெரிவித்தார்.
தவிர்க்க முடியாத மூன்றாவது அலை நாடு முழுவதும் அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் தாக்கக் கூடும். இரண்டாவது அலையில் பாதிக்கபடாதவர்கள் மூன்றாவது அலையில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது எனவும் அவர் கூறினார். நோய்த்தொற்று உள்ள பகுதிகளில் பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்ந்து பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும்.
newstm.in