மக்களே கவனம்.. 2, 3 நாட்களில் கொரோனா அதிகரிக்கும்: அமைச்சர் எச்சரிக்கை..!

மக்களே கவனம்.. 2, 3 நாட்களில் கொரோனா அதிகரிக்கும்: அமைச்சர் எச்சரிக்கை..!

Update: 2022-01-20 06:05 GMT

“அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும்” என்று, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது: “பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து சுமார் 8 லட்சம் பேர் தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். இதனால், அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றிலிருந்து கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள நகர்ப்புறங்களில் 1.27 லட்சம் தெருக்கள் உள்ளன. அவற்றில் 28,219 தெருக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 9,237 தெருக்களில் 3,399 தெருக்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மண்டலங்களாக உள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் கொரோனா பராமரிப்பு மையம் ஆகியவற்றில் 1.92 லட்சம் படுக்கைகள் தயாராக இருக்கின்றன.

இதுவரை 9,000 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. கொரோனா பாதிப்புகள் அதிகரித்தாலும், கொரோனா சிகிச்சைக்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான படுக்கைகள் காலியாக உள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.

Similar News