கோதாவரி ஆற்றில் நடக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு- லீக்கான புகைப்படங்கள்..!
கோதாவரி ஆற்றில் நடக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு- லீக்கான புகைப்படங்கள்..!
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு பணிகள் ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் நடைபெற்று வருகின்றன. அதற்கான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஓடும் காவிரி ஆறு பொன்னி என்றும் குறிப்பிடப்படுகிறது. அதனால் தான் அமரர் கல்கி இந்த வரலாற்று நாவலை எழுதும் போது, ‘பொன்னியின் செல்வன்’ என்று பெயரிட்டார். அதன்படி, கதையில் நடக்கும் முக்கிய சம்பவங்கள் அனைத்தும் காவிரி ஆற்றங்கரையில் அல்லது காவிரி ஆற்றுப் பகுதிகளில் நடப்பது போலவே அவர் எழுதினார்.
பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் படமாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இதில், காவிரி ஆற்றுக்கான காட்சிகள் எங்கு எடுக்கப்படும் என்கிற கேள்வி பல ரசிகர்கள் மத்தியில் இருந்திருக்கக்கூடும். காரணம், தமிழகத்தில் ஓடும் காவிரி ஆற்றில் நீரோட்டம் சொல்லும்படி இல்லை. அதனால் அங்கு படப்பிடிப்பு நடைபெறாது என்பது உறுதியாகவே தெரிந்திருந்தது. இதனால் மணிரத்னத்தின் முனைப்பை அறிய பொன்னியின் செல்வன் நாவல் ஆர்வலர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் காவிரி ஆற்றுப் பகுதிகளில் நடப்பதற்கான காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டது. அதற்காக படக்குழுவினர் தேர்வு செய்தது கோதாவரி ஆறு. அதன்படி, ஹைதராபாத்தில் படப்பிடிப்புக்கு இடைவேளை விட்டுள்ள மணிரத்னம், ஆந்திராவின் சிங்கம்பள்ளி மற்றும் பப்பிகொண்டலு கிராமங்களுக்கு இடையில் ஓடும் கேதாவரி ஆற்றுப் பகுதிகளில் படக்குழுவுடன் முகாமிட்டுள்ளார்.
அங்கு தான் தற்போது பொன்னியின் செல்வன் காவிரி ஆற்றுப் பகுதிகளுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார் உள்ளிட்டோர் கோதாவரி ஆற்றுப் பகுதிகளில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளனர். மேலும், சில நடிகர்களும் வரக்கூடிய நாட்களில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது. அதில் முதல் பாகம் வரும் ஆகஸ்டு மாதம் வெளியாகலாம் என கூறப்படுகிறது. அதை தொடர்ந்து இரண்டாவது பாகம் 2022-ம் ஆண்டில் வெளியாகக்கூடும் என்று சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவை சேர்ந்த பல்வேறு கலைஞர்கள் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க முயற்சி எடுத்து பிறகு கைவிட்டுவிட்டனர். ஆனால் அதில் வெற்றி கண்டுள்ளது மணிரத்னம் மட்டுமே.
நடிகர் ரஜினிகாந்தின் மகளான சவுந்தர்யா பொன்னியின் செல்வன் நாவலை வெப் சிரீஸாக தயாரிக்கப்படும் என அறிவித்து, அதற்கான ப்ரோமோஷன் வீடியோவையும் அவர் வெளியிட்டார். ஆனால் அதன் நிலை என்ன என்று இதுவரை தெரியாது. சுல்தான், ஆக்கர் ஸ்டூடியோஸ், ராணா வரிசையில் அதுவும் இணைந்துவிட்டதாகவே தெரிகிறது.