5 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் திறப்பு!!
5 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் திறப்பு!!
பண்டிகை காலம் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.
கொரோனா 3ஆவது அலையில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஜனவரி 31ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த ஜனவரி 14ஆம் தேதி முதல் நேற்று வரை அனைத்து வழிபாட்டு தலங்களும் மூட உத்தரவிடப்பட்டது. வழிபாட்டு தலங்களில் தினசரி நடைபெறும் பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறும் என்றும் இருப்பினும் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதன் காரணமாக நேற்று தைப்பூச நாளன்று முருகன் கோவில்களில் அபிஷேகம் சிறப்பு பூஜைகளின் போது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் வாயிலில் நின்று பக்தர்கள் வழிபட்டனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 5 நாட்களுக்கு பிறகு அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று திறக்கப்பட்டன. பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 4 நாட்களாக கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் காலை முதலே சாமி தரிசனத்திற்காக வழிபாட்டு தலங்களில் குவிய தொடங்கினர்.
newstm.in