பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு! முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!!
பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு! முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!!
21ஆவது இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி வந்திருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்பு டெல்லியின் ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்றது. முன்னதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் செர்ஜி ஷோய்குவுடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அதன் முடிவில் இரு நாடுகளுக்கு இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்படி ஏகே 203 ரக துப்பாக்கிகள், 6 லட்சம் எண்ணிக்கையில் இந்தியா ரஷ்யா உதவியுடன் தயாரிக்கவுள்ளது. அதாவது இந்த 6 லட்சம் துப்பாக்கிகளும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும்.
அதற்கான தொழில்நுட்ப உதவிகளை ரஷ்யா இந்தியாவிற்கு வழங்கும். 5100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதே போல் 2031 வரை தொழில்நுட்ப ரீதியாக, ரஷ்யா, இந்திய ராணுவத்திற்கு உதவிகளை வழங்கும் ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டது.
சந்திப்பின் போது பேசிய பிரதமர் மோடி, கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு சவால்களை இருநாடுகளும் எதிர்கொண்டன. இருப்பினும் இந்தியா - ரஷ்யா உறவில் வளர்ச்சிதான் ஏற்பட்டுள்ளது என்றார்.
அப்போது பேசிய ரஷ்ய அதிபர் புடின், இந்தியா - ரஷ்யா இடையிலான உறவு தனித்தன்மை வாய்ந்தது என்றும், ரஷ்யாவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இந்தியா உள்ளது எனவும் கூறினார்.
பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புதின் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, விண்வெளி, கலாசாரம், அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளில் 10க்கும் அதிகமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
newstm.in