முக கவசம் அணியாமல் வாழும் வாழ்க்கை எப்போது வருமோ என்ற ஏக்கம் உள்ளது - பூஜா ஹெக்டே
முக கவசம் அணியாமல் வாழும் வாழ்க்கை எப்போது வருமோ என்ற ஏக்கம் உள்ளது - பூஜா ஹெக்டே
மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தில் பூஜா ஹெக்டே அறிமுகமானார். அந்தப் படத்தின் மிகப்பெரிய மைனஸ், நாயகியாக நடித்த பூஜா ஹெக்டே என பலரும் குறிப்பிட்டனர். அதோடு தமிழில் காணாமல் போனார். ஆனால், தெலுங்கு அவரை அரவணைத்தது. துவ்வாடு ஜெகன்நாதம், மகரிஷி, அல வைகுந்தபுரமலு என முக்கியமான படங்களில் நடித்தார். இந்தியில் மொகஞ்சதாரோ, ஹவுஸ்ஃபுல் 4 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து இந்தி, தெலுங்கின் முன்னணி நடிகையானார்.
அதனைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படத்தில் அவரை நாயகியாக ஒப்பந்தம் செய்தனர். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. ஜார்ஜியாவில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டி வருமாறு,
“கொரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை, கொரோனாவுக்கு பிந்தைய வாழ்க்கை என்று கொரோனா எல்லோரது வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனாவுக்கு முன்பு ஜாலியாக சுற்றிய மாதிரி இப்போது சுற்ற முடியாத நிலைமை உள்ளது.
கொரோனா முன்னால் எல்லோரும் சமம். அதற்கு பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் கிடையாது. எல்லோரையும் தாக்குகிறது. விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டி உள்ளது.
பாதுகாப்புக்கு எல்லா முன் எச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்க வேண்டி உள்ளது. குடும்பத்தில் உள்ளவர்கள் வீட்டோடு இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நாங்கள் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டி இருக்கிறது.
ஏதோ ஒரு தெரியாத பயம் எங்களை பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முன்பு மாதிரி எங்களால் சுற்ற முடியவில்லை. படப்பிடிப்பு அரங்கிலும் சுதந்திரமாக இருக்க முடியவில்லை. இந்த வேதனை எனக்குள் நிறைய இருக்கிறது. முக கவசம் அணியாமல் வாழும் வாழ்க்கை எப்போது வருமோ என்ற ஏக்கம் உள்ளது.”
இவ்வாறு அவர் கூறினார்.