துபாயில் ஆபாச பேச்சு! இளைஞருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

துபாயில் ஆபாச பேச்சு! இளைஞருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

Update: 2021-08-19 11:40 GMT

துபாயில் பணிபுரியும் ஒருவர் தனது சொந்த கிராமத்தின் தலைவர்களை ஆபாசமாக பேசி வாட்ஸ் அப்பில் வெளியிட்ட ஆடியோவை ஊருக்கே ஒலிபரப்பி, அந்த நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர் கிராம நிர்வாகிகள்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மடை ஊராட்சிக்கு உட்பட்ட பால்கரை கிராமத்தில் 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் குடிநீர் ஆதாரமான மரைக்காயர் ஊருணி ஒரு சில நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆக்கிரமிப்பை அகற்ற, ஊர்த் தலைவர் கருப்பையா தலைமையில் ஊர் மக்கள் ஒன்றுகூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்தில், குழு அமைத்து ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, சில நாட்களுக்கு முன்பு, ராமநாதபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலையில் மரைக்காயர் ஊருணியின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதில், அதே ஊரைச் சேர்ந்த, தற்போது துபாயில் பணிபுரிந்துவரும் முத்துக்குமார் வசம் இருந்த இடமும் அளக்கப்பட்டது.

இதை, குடும்பத்தினர் மூலம் அறிந்த முத்துக்குமார், ஊர் பிரமுகர்களை ஆபாசமாக பேசி, அதை வாட்ஸ் அப்பில் ஆடியோக்களாக அனுப்பினார். இந்தப் பேச்சு பல்வேறு குழுக்களிலும் பரவியது. இதையடுத்து கிராம பிரமுகர்கள் அந்தப் பேச்சை பதிவு செய்து, எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

ஆனால், இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, முத்துக்குமாரின் பேச்சை ஒலிபெருக்கி மூலம் கிராமம் முழுவதும் ஒலிபரப்பினர். அத்துடன், கிராமத்தின் சார்பில் முத்துக்குமாருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News