முதன்மை ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார் பிரசாந்த் கிஷோர்!
முதன்மை ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார் பிரசாந்த் கிஷோர்!
பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கடந்த சில நாட்களாக உட்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது. முதல்வர் அம்ரிந்தர் சிங் மற்றும் சித்துவுக்கு இடையே மோதல் போக்கு தொடர்ந்து வந்தது. பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இந்த மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய நெருக்கடிக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது.
இந்நிலையில் தற்போது முதல்வரின் முதன்மை ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், பொது வாழ்கையிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக்கொள்வதாகவும், அடுத்தகட்டம் குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் சிறந்த அரசியல் ஆலோசகராகவும், தேர்தல் வியூக நிபுணராகவும் அறியப்படுகிறார் பிரசாந்த் கிஷோர். 2011-ம் ஆண்டு முதல் பிரசாந்த் கிஷோரின் அரசியல் ஆலோசனை நிறுவனம் ஐபேக் ஒன்பது தேர்தல்களில் வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் பிரசார ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதில் எட்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது.
2012-ல் 4-வது முறையாக குஜராத் முதல்வராகவும், 2014-இல் பிரதமராகவும் மோடிக்கு வியூகம் வகுத்தார், 2017-ல் உத்தர பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் காங்கிரசுக்கும், 2019-ல் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், 2020-ல் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால், 2021-ல் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும் சட்டமன்ற தேர்தல்களில் வியூகம் அமைத்துக் கொடுத்தார். இதில் உத்தர பிரதேசத்தில் மட்டுமே இவரது வியூகம் காங்கிரசுக்கு கைகொடுக்கவில்லை.