அதிமுக தலைமைக்கு பிரஷர்.. பாஜக வேண்டாம், தனித்தே போட்டியிடுவோம்..!
அதிமுக தலைமைக்கு பிரஷர்.. பாஜக வேண்டாம், தனித்தே போட்டியிடுவோம்..!;
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்த 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்துவதற்கான, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை உடனடியாக நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், வார்டு வரையறை செய்வது, வாக்குச்சாவடிகள் அமைப்பது, வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வருகிற டிசம்பர் மாதத்திற்குள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு தேர்தல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை, உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் மேலிடத்தை வலியுறுத்தி வருகின்றனர்.குறிப்பாக, விழுப்புரம் மாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் நிர்வாகிகள், வருகிற உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே போட்டியிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திடம் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏற்கெனவே சி.வி.சண்முகம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால்தான் தோல்வி அடைந்தோம்; அதனால், பாஜவுடன் இனி தேர்தல் கூட்டணி கிடையாது என்று வெளிப்படையாக பேசியுள்ளார். இதே கருத்தைத்தான் பல அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால், சிறுபான்மையினர் ஓட்டு முழுமையாக அதிமுக வேட்பாளர்களுக்கு கிடைக்காமல் போய் விடுகிறது. மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் சிறுபான்மை மக்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள்.
ஆனால், தற்போது பாஜக தலைமை கொடுக்கும் நெருக்கடி காரணமாக கூட்டணி வைக்க வேண்டிய நிலைமை கட்சி தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை உடைத்து வெளியே வர வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் வெளிப்படையாக தலைமைக்கு கோரிக்கை வைக்கத் தொடங்கி உள்ளனர்.
கட்சி முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தாலும், அதிமுகவின் முன்னணி தலைவர்கள் அதிரடியாக பாஜக கூட்டணியில் இருந்து கழட்டிவிட முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனாலும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக, பாமக ஆகிய கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிடாமல், அனைத்து வார்டுகளிலும் அதிமுக தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் கிடைக்கும் வெற்றி மற்றும் தோல்வியை கருத்தில் கொண்டு, வரும் காலங்களில் அதிமுக கூட்டணி குறித்து புதிய முடிவ எடுக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்பட்டாலும், லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் இதுவரை அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் மாஜி அமைச்சர் சண்முகம் போல மேலும் பல மாவட்டங்களிலும் இதே கோரிக்கையை நிர்வாகிகள் எழுப்பத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் தொண்டர்கள் இல்லாத கட்சிக்கு நாமே உள்ளாட்சி பிரதிநிதிகளை கொடுக்க வேண்டுமா..? பாஜகவை சேர்ப்பதால் உள்ளாட்சிகளில் நாம் படுதோல்வியை சந்திக்க வேண்டியது வரும் என்றும் அவர்கள் தலைமையை எச்சரிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால் கூட்டணியை மாவட்ட நிர்வாகிகளே முடிவு செய்து, அவர்களே தேவைக்கு ஏற்ப இடங்களை ஒதுக்கிக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்க மேலிட நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.