பொதுமக்களே எச்சரிக்கை : நூதன முறையில் மோசடி..!
பொதுமக்களே எச்சரிக்கை : நூதன முறையில் மோசடி..!
ஆன்லைனில் பொருட்களை வாங்குவோரை நூதன முறையில் மோசடி கும்பல் ஏமாற்றி வருகிறது; பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்து விடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக ஆன்லைன் வழியே நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இதில், ராணுவ வீரர் போல் போலியாக அடையாளப்படுத்தி, பணி மாறுதல் காரணமாக தன் கார், பைக் மற்றும் பொருட்களை விற்பனை செய்ய உள்ளதாக, ஆன்லைன் வணிக தளங்களில் விளம்பரப்படுத்துகின்றனர்.
இதற்கான விலையை, மக்களை கவரும் வகையில் புகைப்படங்களுடன் பதிவிடுகின்றனர். இதைப் பார்த்து அவர்களை அணுகும் பொதுமக்களிடம் பணத்தை பறிக்கும் வேலையில் மோசடி கும்பல் ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள், இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ராணுவ வீரர்கள் என நினைத்து அணுகும் மக்களை நம்ப வைக்க, வாட்ஸ் ஆப் மூலம் ராணுவ அடையாள அட்டை, ராணுவ உடையில் இருக்கும் படங்களை அனுப்புகின்றனர்.
இதைப் பார்த்து உண்மை என நம்பும் மக்களிடம், தங்களின் பொருட்களுக்கான பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தச் சொல்கின்றனர். இதை நம்பி பலரும் பணத்தை அனுப்பி ஏமாறுகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.