தொடரும் ராஜேந்திர பாலாஜி சிறைவாசம்.. ஜாமின் மனு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு !!

தொடரும் ராஜேந்திர பாலாஜி சிறைவாசம்.. ஜாமின் மனு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு !!

Update: 2022-01-10 19:15 GMT

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர், ஆவின், மின்சாரம், இந்து சமய அறநிலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் மூன்று கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அளித்தவரும் அதிமுக தான். 

இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவு வந்த நாளன்றே அதாவது, டிசம்பர் 17 தேதியே அவர் தலைமறைவானார். 

பின்னர் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். தொடர்ந்து, ஜனவரி 5ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் வைத்து தமிழக காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு ஒருமாதம் ஜாமின் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கூடுதல் ஆவணங்களை பார்த்துவிட்டு ஜாமின் வழங்குமாறு தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க கோரி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதனிடையே,  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வேலை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத குற்றப்பிரிவு போலீசார் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

Similar News