கூட்டணி குறித்து ராமதாஸ் அதிருப்தி கருத்து.. அதிமுக முன்னாள் அமைச்சர் கொடுத்த பதிலடி !
கூட்டணி குறித்து ராமதாஸ் அதிருப்தி கருத்து.. அதிமுக முன்னாள் அமைச்சர் கொடுத்த பதிலடி !
கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் கூறிய குற்றச்சாட்டுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.
சேலம் சீலநாயக்கன்பட்டியில் கடந்த சனிக்கிழமை அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாமக எம்.எல்.ஏ.க்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து தள்ளினர். இது பாமகவின் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சேலம் அருகே சூரமங்கலத்தில் பாமகவின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ராமதாஸ், கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாமக வெற்றி பெறக் கூடாது என்பதற்காக, கூட்டணி கட்சிகள், கூட்டணி தர்மத்தை மீறியதாக சாடினார். அதனாலேயே 20 தொகுதியில் வெற்றி பெற வேண்டிய பாமக 5 தொகுதிகளை மட்டுமே பெற முடிந்தது என்றார்.
234 தொகுதியில் பாமக விற்கு வெறும் 23 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட பிறரிடம் அதிக சீட்டு வேண்டும் என்று கெஞ்ச வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவது வேதனையாக உள்ளது. இன்னும் நாம் ஏமாளிகளாக இருந்தது போதும் , வீர வன்னியர்களாக தமிழகத்தை ஆளுவேன் என்ற உணர்வோடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், தனித்து போட்டியிட்டிருந்தால் ஆட்சியை கைப்பற்றி இருப்போம் என்றும் கூறியுள்ளார்.
கூட்டணி கட்சிகள், கூட்டணி தர்மத்தை மீறியதாக ராமதாஸின் கருத்து, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அதிமுக கூட்டணியில் பாமக இல்லாததால் அவர்களின் கருத்துக்கு பதில் கூற வேண்டியதில்லை என அவர் தெரிவித்தார்.
இதனால், திமுகவுடன் பாமக கூட்டணி அமைக்குமோ என்ற பரபரப்பு அரசியலில் எழுந்துள்ளது.
newstm.in