நடிகராக அரிதாரம் பூசும் செல்வராகவன்- கொந்தளிக்கும் ரசிகாஸ்..!

நடிகராக அரிதாரம் பூசும் செல்வராகவன்- கொந்தளிக்கும் ரசிகாஸ்..!

Update: 2021-02-25 17:29 GMT

இயக்குநர் செல்வராகவன் நடிகராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ‘சாணிக் காகிதம்’ படத்திற்கான படப்பிடிப்பில் இன்று முதல் பங்கேற்கவுள்ளார். அதற்காக அவருக்கு படக்குழு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது.

தமிழ் சினிமாவிலுள்ள இயக்குநர்களில் இளம் வயதிலேயே மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர் செல்வராகவன். கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்திற்கு செல்வராகவன் திரைக்கதை எழுதினார். அப்படத்தை அவருடைய தந்தை கஸ்தூரிராஜா இயக்கி இருந்தார்.அதை தொடர்ந்து இயக்குநராக செல்வராகவன் இயக்கிய முதல் படம் காதல் கொண்டேன். 2003-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம், தமிழ் சினிமாவில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. தனுஷ் என்ற கலைஞன் மாபெரும் இடத்தை அடைந்ததற்கு பின்னால் செல்வராகவன் என்கிற அவருடைய அண்ணனின் உழைப்பும் உள்ளது.

காதல் களங்களை வித்தியாசமான முறையில் கையாண்ட விதத்தில், தமிழக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் செல்வராகவன். பல்வேறு தோல்விப் படங்களை அவர் இயக்கி இருந்தாலும், செல்வராகவன் எப்போது படம் இயக்கினாலும் அதற்கு மிகப்பெரிய ஆர்வலும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் இருக்கும்.கடந்த 23 ஆண்டுகளாக இயக்குநராக தனி அடையாளம் படைத்துவிட்ட செல்வராகவன், தற்போது நடிகராக அறிமுகமாகவுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘சாணிக் காகிதம்’ படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கிறார். அதற்கான படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது.

மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து செல்வராகவனுக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்தன.

சாணிக் காகிதம் படத்தில் இன்று முதல் நடிப்பதை தொடர்ந்து, இயக்குநர் செல்வராகவன், 23 ஆண்டுகளாக திரைப்பட உருவாக்கத்தில்... இன்று முதல் நடிகராகவும்... என் ரசிகர்களுக்கு நான் கடன்பட்டு இருக்கிறேன், அவர்கள் தான் என்னை உருவாக்கியவர்கள் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


இதை ஷேர் செய்து வரும் ரசிகர்கள் பலர், செல்வராகவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் சாணிக் காகிதம் பட இயக்குநர் அருண் மாதஸ்வரன், செல்வராகவன் ட்வீட்டை டேக் செய்து, அவருடன் பணியாற்றுவதில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக கூறியுள்ளார். 


 

Tags:    

Similar News