பழவேற்காடு கடலில், மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் வலையில், கானாங்கெளுத்தி மீன்கள், அதிக அளவில் கிடைத்து வருகின்றன.பழவேற்காட்டில், ஒரு வாரமாக, கடல் சீற்றமாக இருந்ததால், படகுகள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மீனவர்கள், தொழிலுக்குச் செல்லாமல் இருந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், கடல் சீற்றம் குறைந்ததைத் தொடர்ந்து தொழிலுக்குச் சென்றனர். வஞ்சிரம், சங்கரா உள்ளிட்ட மீன்களை எதிர்பார்த்து சென்ற மீனவர்கள் வலையில், தற்போது, கானாங்கெளுத்தி மீன்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. படகுகளில் இருந்து கொண்டு வரப்படும் கானாங்கெளுத்தி மீன்களை, மொத்த வியாபாரிகள் வாங்கி, சிறியது, பெரியது என தரம் பிரித்து, அவற்றை ஐஸ் பெட்டிகளில் அடைத்து, வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

                                         

கடலில் இருந்து கானாங்கெளுத்தி மீன்களுடன் கரை திரும்பும் படகுகள், அவற்றை வாங்கி பதப்படுத்த தயார் நிலையில் குளிருட்டி வாகனங்கள், மீன்கள் ஏலம் விடுவது என, மீன் இறங்குதளம் பகுதி பரபரப்பாக இருக்கிறது.இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:தற்போது தெற்கில் இருந்து, வடக்கு நோக்கி காற்று வீசுகிறது. இச்சமயங்களில் கானாங்கெளுத்தி, கவளை, மத்தி உள்ளிட்ட மீன்கள் மட்டுமே கிடைக்கும்.கானாங்கெளுத்தி மீன்கள் அதிக அளவில் கிடைத்தாலும் விலை குறைவு என்பதால், எதிர்ப்பார்த்த வருவாய் இருக்காது.அடுத்த, இரு மாதங்களுக்கு இவற்றை தவிர, வஞ்சிரம், சங்கரா, சூறை, பாறை உள்ளிட்ட மீன்கள் கிடைப்பது அரிதாகும். அதனால், இனி இந்த வகையான மீன்களின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக மீனவர்கள் கூறினர்.

newstm.in

Tags: