கொரோனாவால் பாதித்த துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடனுதவி ! மத்திய அரசு அதிரடி !
கொரோனாவால் பாதித்த துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடனுதவி ! மத்திய அரசு அதிரடி !
கொரோனா பரவல் மற்றும் அதனை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கால் இந்தியாவில் அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது ஓரளவுக்கு கொரோனாவில் இருந்து மீண்டு வருவதால் பல்வேறு மாநிலங்களில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்த வகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடனுதவி அளிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பொருளாதார இழப்பு குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், கொரோனா பாதிப்பிலிருந்து மீளும் வகையில், 8 பொருளாதார நிவாரண நடவடிக்கைகளை அறிவிக்கிறோம். இதில் நான்கு புதியவை என்றும் ஒன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார கட்டமைப்புகளுக்காகவும் ஒதுக்கப்படுகிறது.
கொரோனாவால் பாதித்த துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. சுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடியும், பிற துறைகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடியும் கடன் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. மருத்துவமனைகள் உள்ளிட்ட கூட்டமைப்பு வசதிகளை அமைக்க ரூ.100 கோடி வரை கடன் வழங்கப்படும். 7.95 சதவிகிதம் வட்டியில் கடன் வசதி 3 ஆண்டுகளுக்கு அளிக்கப்படும். பிற துறைகளுக்கு கடனுக்கு வட்டி 8.25 சதவிகிதமாக இருக்கும் என அவர் அதிரடியாக அறிவித்தார்.
மேலும், சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில், 8 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சுற்றுலா ஏஜென்சிகளுக்கு ரூ.10 லட்சமும், உரிமம் பெற்ற சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ரூ.1 லட்சமும் கடன் வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
newstm.in