இறந்தவருக்கு ரூ.1.20 லட்சம் கடன்.. கூட்டுறவு சங்க முறைகேடு அம்பலம்..!

இறந்தவருக்கு ரூ.1.20 லட்சம் கடன்.. கூட்டுறவு சங்க முறைகேடு அம்பலம்..!

Update: 2022-01-11 07:10 GMT

சேலம் மாவட்டம், இடைப்பாடி, வெள்ளரி வெள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு, 2016 மற்றும் 2021ல் விவசாய கடன் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் துறைசார் அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

இதையடுத்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், முறைகேடு நடந்தது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: “வேட்டுவப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி (58). கூட்டுறவு சங்க உறுப்பினரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி இறந்து விட்டார்.

அவர், 2019-ம் ஆண்டு கூட்டுறவு சங்கத்தில் ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதை கட்ட அறிவுறுத்தியும், கூட்டுறவு சார்பதிவாளர் கடந்த டிசம்பர் 2-ம் தேதி சம்மன் அனுப்பியுள்ளார். இதையடுத்து கூட்டுறவு சார்பதிவாளர் முன் ஆஜரான ராமசாமியின் மகன் சித்துராஜ், தனது தந்தை இறந்ததை தெரிவித்தார்.

மேலும், அவர் பெயரில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார். இதனால், 2016 - 2021ல் தள்ளுபடி செய்த விவசாய கடன்களை முழுமையாக விசாரித்து, முறைகேடான கடன்களை வசூலிக்குமாறு சங்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்” இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News