ரஜினி பட பெயரில் ரூ.15 கோடி மோசடி.. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மீது வழக்கு..!
ரஜினி பட பெயரில் ரூ.15 கோடி மோசடி.. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மீது வழக்கு..!
மலேசியாவை தலைமையிடமாகக் கொண்டு 'மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவன தமிழக கிளையின் இயக்குநர் ராஷிக் அகமது கனி (38). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “சென்னை சாலிகிராமம் தேவர் கார்டன் பகுதியில் வசிப்பவர் முரளி என்ற ராமசாமி (53). திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரான இவர், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவர், 2018 அக்டோபரில் ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் விநியோக உரிமை தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார். அந்த படத்தை வெளியிடுவது தொடர்பாக எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு 30 கோடி ரூபாய் வாங்கினார்.
நாங்கள் விசாரித்தபோது, ‘பேட்ட’ படத்தின் விநியோக உரிமை முரளியிடம் இல்லை என்பது தெரியவந்தது. இதனால், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டோம். அதே ஆண்டு டிசம்பரில் 15 கோடி ரூபாயை தந்தார். மீதமுள்ள தொகையில் 5 கோடி ரூபாய்க்கு முன் தேதியிட்ட காசோலை கொடுத்தார்.
மேலும், 10 கோடி ரூபாய்க்கு ‘காஞ்சனா-3’, ‘நான் ருத்ரன்’ என்ற படங்களின் விநியோக உரிமையை தருவதாக ஒப்பந்தம் செய்தார். ஆனால், ‘காஞ்சனா- 3’ படத்தின் விநியோக உரிமை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இல்லை. ‘நான் ருத்ரன்’ படம் இயக்கப்படாமலேயே கைவிடப்பட்டதும் தெரியவந்தது.
அத்துடன், 5 கோடி ரூபாய்க்காக கொடுத்த காசோலையும், முரளியின் வங்கிக் கணக்கில் பணம் இன்றி திரும்பி வந்தது. பணத்தை தர முடியாது என முரளி மிரட்டுகிறார். அவரிடம் இருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, முரளி மீது மோசடி உட்பட இரு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். அடுத்தகட்டமாக, முரளிக்கு 'சம்மன்' அனுப்பி விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.