கருணாநிதி பெயரை நீக்க ரூ.23 கோடி செலவு..! : எங்கே, ஏன் தெரியுமா..?

கருணாநிதி பெயரை நீக்க ரூ.23 கோடி செலவு..! : எங்கே, ஏன் தெரியுமா..?

Update: 2021-06-25 10:09 GMT

தமிழக சட்டசபையில் நேற்று, 2019ம் ஆண்டுக்கான கணக்கு தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பள்ளிக்கல்வித் துறையின் இழப்பு குறித்த விவரம் வருமாறு: ‘அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பிளஸ் 2 வரை அனைத்து பாடங்களுக்கும் இலவச புத்தகம் வழங்கப்படுகிறது. இதற்கான தயாரிப்பு பணிகள் மற்றும் செலவுகளை பள்ளிக்கல்வித் துறை கவனிக்கிறது.

தொடக்கக் கல்வி, பள்ளிக்கல்வி, மாநில கல்வி ஆராய்ச்சி நிறுவன இயக்குநரகங்கள் மற்றும் பாடநூல் கழகம் ஆகியவை புத்தக தயாரிப்பு மற்றும் அச்சிடும் பணிகளை மேற்கொள்கின்றன. புத்தகம் அச்சடிப்பை கவனிக்கும் பாடநூல் கழகம், அரசிடம் செலவு தொகையை பெறுகிறது. 

2019 - 20ம் ஆண்டுக்கு அச்சு காகிதங்களை கையாளும் கட்டணம் எனக் கூறி, அரசாணையில் உள்ளதை விட 5 சதவீதம் கூடுதல் தொகையை பாடநூல் கழகம் அரசிடம் கேட்டது. இதற்கு தணிக்கையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதும், பாடநூல் கழகம் கைவிட்டது. ஆனால், இந்த செலவு தொகையை நிர்ணயித்து பெற்றுத் தரும் தொடக்க, பள்ளிக்கல்வி இயக்குநரகங்கள், இது குறித்து முந்தைய ஆண்டுகளில் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை.

இந்த அலட்சியத்தால், 2016 - 17ம் நிதி ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு, அரசாணையை விட கூடுதலாக 21.85 கோடி ரூபாயை பாடநூல் கழகம் பெற்றுள்ளது. இது, அரசுக்கு ஏற்பட்ட இழப்பாகும்.

அதேபோல், 2015ல் அதிமுக ஆட்சியின்போது தமிழக பாடப் புத்தகத்தில் முன்னுரை மற்றும் முகவுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அப்போது அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஆகியோருக்கு நன்றி கூறி எழுதப்பட்டிருந்தது. இதன் காரணமாக, அந்த புத்தகங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. முன்னுரை, முகவுரை மாற்றத்துக்காக 6.37 லட்சம் பிரதிகள் மீண்டும் அச்சடிக்கப்பட்டன. இந்த வகையான தேவையற்ற செலவுக்கு, 23.27 கோடி ரூபாய் வீணானது. புத்தகத்தின் அம்சங்களை சரிவர செய்யாதது பள்ளிக்கல்வித் துறையின் தவறாகும்.

அதேபோல், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டடத்தை பசுமை கட்டடமாக பராமரிக்க, பல்வேறு தானியங்கி கருவி வசதிகள் செய்யப்பட்டன. இதற்கு 5.25 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இதற்கு, ஆண்டு பராமரிப்புக்கு 75 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. இந்த கருவிகளை 2011 - 2015 வரை அரசு சரிவர பராமரிக்கவில்லை. ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தத்தையும் நீட்டிக்கவில்லை. இதனால், அந்த நவீன கருவிகள் செயல்படாமல் வீணாகி விட்டன.

மேலும், நூலகத்தின் உயரமான கட்டடத்தை சுத்தப்படுத்தும் கருவி, தீ தடுப்பு குழாய் மற்றும் கட்டுப்பாட்டு அறை, 'லிப்ட்' போன்றவற்றின் பராமரிப்பையும் மேற்கொள்ளவில்லை. இந்த வகையில் பள்ளிக்கல்வி துறை மற்றும் நூலக பொறுப்பு அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசுக்கு 7.98 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக, பள்ளிக்கல்வித் துறையின் பல்வேறு பிரிவு அதிகாரிகளின் அலட்சியமான நடவடிக்கைகளால், அரசுக்கு 53 கோடி ரூபாய் வீண் செலவாகியுள்ளது’ என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News