ரூ.51 லட்சம் மோசடி – பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!!
ரூ.51 லட்சம் மோசடி – பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பா.ஜ.க நிர்வாகி ஒருவர் போலி விசா வழங்கி 51 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புத்தூர் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். அவர் கேலக்ஸி டிராவல்ஸ் என்ற பெயரில் வெளிநாட்டு பணிகளுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனமும் நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனத்தின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கொத்தங்குடி வேப்பூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 98 பேர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூர் செல்வதற்காக தலா 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வீதம் பணம் செலுத்தி உள்ளனர்.
3 மாதத்தில் அனைவரையும் சிங்கப்பூர் வேலைக்கு அனுப்புவதாகவும் இல்லையென்றால் பணத்தை திருப்பி அளிப்பதாகவும் ஆனந்தராஜ் ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும் போலியாக சிங்கப்பூரில் பணிபுரிவதற்கான விசாவையும் வழங்கி ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆறு மாதங்களாக வெளிநாட்டிற்கும் அனுப்பாமல் கட்டிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஆனந்தராஜ் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட 60க்கும் மேற்பட்டோர் தனி பேருந்தில் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் கொள்ளிடம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
newstm.in