கொரோனா விதிகளை மீறி விற்பனை.. பெற்ற தாயாரிடம் இருந்து காய்கறி பறிமுதல் செய்த நகராட்சி ஊழியர் !!

கொரோனா விதிகளை மீறி விற்பனை.. பெற்ற தாயாரிடம் இருந்து காய்கறி பறிமுதல் செய்த நகராட்சி ஊழியர் !!

Update: 2021-05-12 08:23 GMT

இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு தீவிரமாக பரவி வரும் கொரோனாவால் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அங்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் இன்னும் சில நாட்கள் ஊரடங்கை கடைபிடித்தால் மேலும் பாதிப்பை குறைக்க முடியும் என அம்மாநில அரசு திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதனால் காய்கறி விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் அதற்கு  பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிராவில் கட்டுப்பாடுகளை மீறி காய்கறி விற்பனை செய்த தாயாரின் காய்கறிகளை அவரது மகனும் நகராட்சி பணியாளருமான பறிமுதல் செய்துள்ளார்.

அமகத் நகர் மாவட்டம் பதார்டி டவுன் மெயின் பஜார் பகுதியை சேர்ந்தவர் ரஷீத் சேக் (36). பதார்டி நகராட்சியில் பணியாளரான இவர், கொரோனா தடுப்பு விதிமுறைகளை அமல்படுத்த அமைக்கப்பட்ட பறக்கும் படையில் இடம் பெற்று உள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தனது குடியிருப்பின் பகுதியில் சோதனை நடத்தியுள்ளார். அப்போது, அவரது வீட்டின் அருகே அவரின் தாயார் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். இதைபார்த்த ரஷீத் சேக் தாயிடம் இருந்து காய்கறிகளை பறிமுதல் செய்தார். மேலும் அந்த காய்கறிகளை நகராட்சி வண்டியில் அள்ளிப்போட்டார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலானது.


இது குறித்து ரஷீத் சேக் கூறியப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வீதி, வீதியாக சென்று காய்கறி விற்க தடை இல்லை. ஆனால் வீதிகளில் ஓரிடத்தில் அமர்ந்தோ அல்லது கூடாரம் அமைத்தோ காய்கறி வியாபாரம் செய்ய அனுமதி இல்லை. இது தொடர்பாக எனது தாயாரிடம் முன்கூட்டியே தெளிவாக கூறியும் விற்பனை செய்ததால் இந்த நடவடிக்கையை எடுத்தேன் என்றார்.

நகராட்சி ஊழியர் ரஷீத் சேக் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்துள்ளார் என்று மாநகராட்சி ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Newstm.in

Tags:    

Similar News