அதே உற்சாகம்.. 20 ஓவர் உலக கோப்பை நாளை தொடக்கம் !!

அதே உற்சாகம்.. 20 ஓவர் உலக கோப்பை நாளை தொடக்கம் !!

Update: 2021-10-16 20:45 GMT

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முதன்முதலாக கடந்த 2007ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி முதல் உலக கோப்பையை கைப்பற்றியது. 

அந்த வகையில், இதுவரை 20- 20 உலக கோப்பை போட்டி 6 முறை நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் 2 முறை (2012, 2016) சாம்பியன் பட்டம் பெற்று உள்ளது. இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010), இலங்கை (2014) ஆகிய நாடுகள் தலா ஒரு முறை கோப்பையை வென்று உள்ளன.

இந்த நிலையில், 7ஆவது 20 ஓவர் உலக கோப்பை போட்டி நாளை (அக்.17) தொடங்கி நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக ‘சூப்பர் 12’ சுற்றில் விளையாடும்.

இலங்கை, வங்காள தேசம் உள்ளிட்ட 8 நாடுகள் தகுதி சுற்றில் விளையாடும். இதில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூகினியா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறும். தொடக்க நாளான நாளை 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது. பி பிரிவில் உள்ள ஓமன் -பப்புவா நியூகினியா (மாலை 3.30), வங்காளதேசம்- ஸ்காட்லாந்து (இரவு 7.30) அணிகள் மோதுகின்றன.

பின்னர், 18ஆம் தேதி நடைபெறும் ஆட்டங்களில் அயர்லாந்து- நெதர்லாந்து, இலங்கை- நமீபியா மோதுகின்றன. வருகிற 22ஆம் தேதியுடன் தகுதி சுற்றான முதல் ரவுண்டு முடிகிறது. 2-வது ரவுண்டான சூப்பர் 12 சுற்று வருகிற 23ஆம் தேதி தொடங்குகிறது.

சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி குரூப்-2ல் இடம்பெற்று உள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அதில் இடம்பெற்றுள்ளன. தகுதி சுற்றில் இருந்து 2 அணிகள் (பி1, ஏ2) அந்த பிரிவில் இடம்பெறும்.

குரூப் 1ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் 2 தகுதி சுற்று அணிகள் (ஏ1, பி2) ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 24ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் துபாயில் இந்திய நேரபடி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இந்த ஆட்டம் ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் லீக் போட்டிகள் முடிவில் 2 பிரிவில் இருந்தும், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும். 10 மற்றும் 11ஆம் தேதிகளில் அரை இறுதி ஆட்டங்கள் அபுதாபி மற்றும் துபாயில் நடக்கிறது.

இறுதிப்போட்டி நவம்பர் 14ஆந் தேதி துபாயில் நடக்கிறது. மொத்தம் 45 ஆட்டங்கள் ஓமனில் உள்ள மஸ்கட் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் நடக்கிறது. ஐபிஎல் முடிந்து உலகக்கோப்பை போட்டிகள் தொடங்குவதால் கிரிக்கெட்கள் ரசிகர்கள் அதே உற்சாகத்தில் உள்ளனர். 

newstm.in

Tags:    

Similar News