ஓசூரில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவிலில், சசிகலா சுவாமி தரிசனம் செய்தார்.
சொத்துகுவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை முடிந்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று காலை சென்னை திரும்பி வந்து கொண்டுள்ளார்.சசிகலா காரில் அதிமுக கொடி கட்டக்கூடாது என அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனால், சசிகலா தனது காரில் அதிமுக கொடி கட்ட போலீசார் தடை விதித்தனர்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் இருந்து, சசிகலா வாகனத்தை தொடர்ந்து 5 வாகனங்கள் மட்டுமே பின் தொடர வேண்டும். இதர வாகனங்கள் வழியிலேயே நிறுத்தப்படும் என கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் விதிகளை மீறுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழக காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், சசிகலா வருகை குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ஓசூரில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருகோவிலுக்கு, அதிமுக கொடி போட்ட துண்டுடன் வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் அம்மனை மனம் உருக வழிபாடு செய்தார். மேலும், கோவிலில் அம்மனிடம் நீண்ட நேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.