தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு.. குழப்பத்தில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்..!

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு.. குழப்பத்தில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்..!

Update: 2022-01-31 13:21 GMT

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பிப்.1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு கடந்த 27ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

அதில், ‘பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. எனவே, அனைத்து வகை பள்ளிகளும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிப்.1 முதல் செயல்பட உரிய ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒமைக்ரான் பரவல் காலத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான புதிய வழிகாட்டுதல்கள் குறித்து எந்தத் தகவல்களும் அந்த சுற்றறிக்கையில் இடம்பெறவில்லை.

மாறாக, கடந்த ஆண்டு ஆக.26-ம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அனுப்பியுள்ள கடிதத்தின் அடிப்படையிலான வழிகாட்டுதல்களே பின்பற்றப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், பழைய வழிகாட்டுதல்களின் அடிப்படையில், ‘மாணவா்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை. இணைய வழியிலும் கற்றல்- கற்பித்தல் பணிகள் நடைபெறும்.

எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம்’ என கல்வித்துறை அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், இது குறித்து தங்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் எந்தவிதமான அறிவுறுத்தலும் வரவில்லை என பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கூறுகையில், ‘பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு இன்னும் சில மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அதேபோன்று மற்ற வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்படவுள்ளது.

இத்தகைய சூழலில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். இது மூன்றாவது அலை என்பதால் அதற்கான புதிய வழிகாட்டுதல்களும் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட வேண்டும்.

பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என்ற தகவல் பரவுவதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு கூட முறையான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

எனவே, நேரடி வகுப்புகளில் மாணவர்கள் அச்சமின்றி பங்கேற்கும் வகையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை உடனடியாக வெளியிட வேண்டும்’ என அவர்கள் தெரிவித்தனர்.

Similar News