பள்ளிகள் மீண்டும் மூடும் நிலை ஏற்படும்.. கல்வி அமைச்சர் பகீர் தகவல்..!
பள்ளிகள் மீண்டும் மூடும் நிலை ஏற்படும்.. கல்வி அமைச்சர் பகீர் தகவல்..!
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தால், பள்ளிகள் மூடப்படுவது மற்றும் தேர்வுகள் நிறுத்தப்படுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் இருந்து அரசு பின்வாங்காது என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. சிக்மகளூர் மாவட்டத்தின் சீகோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பயிலும் 107 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறிப்பிட்ட பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து பேசிய கர்நாடக மாநில கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ், “தொடர்ந்து நிலைமை மோசமாக சென்றால் தேர்வுகள் நிறுத்தப்படும். பள்ளிகள் அனைத்தும் மீண்டும் மூடும் நிலை ஏற்படும். அப்படிப்பட்ட நிலை எழுந்தால் அதிலிருந்து அரசு பின்வாங்காது.
ஆனால், மருத்துவ வல்லுநர் குழு நேரடி வகுப்புகளால் எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர்கள் பள்ளிக்கு சென்று வந்தால் அதுவே போதுமானதாக இருக்கும். தேர்வுகள் நடத்துவதிலும் சிரமம் இருக்காது.
மாநிலம் முழுவதும் ஏற்படும் கொரோனா பாதிப்புகளை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. மாணவர்களின் நிலைமையை நினைத்து பெற்றோர் அச்சப்பட வேண்டாம். மாணவர்களின் உடல்நலனுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சூழல் அமையாது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என உறுதியளிக்கிறேன். ஆனால், மீண்டும் பள்ளிகளை மூடும் நிலை வந்தால்தான் சிக்கலாகிவிடும்” என்று கூறினார்.