வாக்கு வங்கிக்காக பாஜகவுடன் ரகசிய உறவு.. முதலமைச்சரை விமர்சித்த செல்லூர் ராஜூ
வாக்கு வங்கிக்காக பாஜகவுடன் ரகசிய உறவு.. முதலமைச்சரை விமர்சித்த செல்லூர் ராஜூ
சிறுபான்மையினர் வாக்கு வங்கி பாதிக்காத வகையில், முதல்வர் ஸ்டாலின் பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு மதுரையைச் சேர்ந்தவர். இவர் எப்போதும் கலகலப்பாக பேசக்கூடியவர். அதேநேரத்தில் இவரது பேச்சுக்கள் சர்ச்சைகளாகவும் மாறியுள்ளது.
இந்த நிலையில், மன்னர் திருமலை நாயக்கரின் 439ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதுகாப்பு கருதியே குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார வாகன ஊர்திக்கு அனுமதி இல்லை என சொல்கிறார்கள்.
தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கூட அலங்கார வாகன அணிவகுப்பு இல்லை என தெரிவித்தார். தமிழக கலாச்சாரத்தை பிரதமர் பிரதிபலித்தது வருகிறார், வட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழர் போல பிரதமர் நடந்து கொள்கிறார். தமிழகத்துக்கு எதிராக பிரதமர் நடத்து கொள்ளவில்லை. தமிழர்களின் வரலாற்றை மறைக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ளவில்லை. தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு எந்தவொரு நிலைபாட்டையும் எடுக்காது என திண்ணமாக கூறுகிறேன்.
எந்தவொரு பிரதமரும் தமிழர்களின் கலாச்சாரம், பெருமையை உலகுக்கு சொன்னதில்லை. பிரதமர் மோடி தமிழர்களின் பெருமையை உலக அரங்கில் நிலை நிறுத்தி வருகிறார். சிறுபான்மையினரின் வாக்கு வங்கி பாதிக்காத வகையில் முதல்வர் ஸ்டாலின் பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துள்ளார் எனவும் செல்லூர் ராஜு கூறினார்.
newstm.in