களத்தில் இறங்கி உதவும் "நெஞ்சம் மறப்பதில்லை" சீரியல் நடிகை !!

களத்தில் இறங்கி உதவும் "நெஞ்சம் மறப்பதில்லை" சீரியல் நடிகை !!

Update: 2021-05-19 13:42 GMT

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப் பட்டுள்ளது.இருந்த போதிலும் பாதிப்புக்களும் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகிறது. தனிநபர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் நடிகைகள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். 

இந்நிலையில்,செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரைக்கு வந்தவர் சரண்யா தூரடி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.இவர் தற்போது உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உதவுதற்காக களமிறங்கி உள்ளார். அவர் ஷோர் வுமன் சொசைட்டி  (Shore Women Society) என்ற ஒன்றை தொடங்கி மக்களுக்கு உணவளிக்க தொடங்கியுள்ளார். தினம்தோறும் ஐம்பது பேருக்கும் மேல் அவர் உணவளித்து வருகிறார்.

உணவு டெலிவரி செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவர் கூறி இருப்பதாவது..

"கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவளிக்கும் சேவையில் 2 ஆவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறேன். லாக் டவுன் என்பதால் தினமும் காலையில் நானே வண்டியை எடுத்து கொண்டு உணவு பொட்டலங்களோடு கிளம்புகிறேன்."

"இரட்டை மாஸ்க் மற்றும் சானிடைசர் பாட்டிலோடு தடுப்பூசி தந்த துணிவே துணையென்று கிளம்பினாலும் ஒவ்வொரு நாளும் தெரிந்த வட்டத்தில் நிகழும் மரணச் செய்தி கலக்கத்தை கொடுக்கிறது. பசித்த முகத்தில் தெரியும் நன்றியும் அன்புமே இந்த கடினமான சூழலை கடக்க உதவுகிறது."

"நல் உள்ளங்கள் சிலர் தங்களால் ஆன நிதி அனுப்பி உணவளிக்கும் என் கரங்களுக்கு வலு சேர்த்து இருக்கிறீர்கள். அத்தனை பேருக்கும் என் மரியாதையும் பேரன்பும். தொடர்ந்து பசியாற்றுவோம்."

இவ்வாறு சரண்யா குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

Similar News