கோவையிலும் அதிர்ச்சி!! 70 கிலோ ரசாயனம் தடவிய மீன்கள் பறிமுதல்...!
கோவையிலும் அதிர்ச்சி!! 70 கிலோ ரசாயனம் தடவிய மீன்கள் பறிமுதல்...!
கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் இருந்து 70 கிலோ பார்மலின் தடவிய மீன்கள் மற்றும் 430 கிலோ கெட்டுப்போன மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அண்மையில் மதுரையில் பார்மலின் என்ற ரசாயனம் தடவிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் மீன் சந்தைகளில் ஆய்வு செய்ய மீன்வளத்துறை இயக்குநர் உத்தரவிட்டார். அதன்படி, கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மீன் சந்தைகளில் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து சோதனை மேற்கொள்வதற்காக 4 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் நேற்று உக்கடத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லரை மீன் சந்தைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதையடுத்து பார்மலின் தடவிய மீன்களால் ஏற்படும் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ்களை மீன் வியாபாரிகளுக்கு அதிகாரிகள் விநியோகித்தனர். மீறி விற்பனை செய்தால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதுபோன்ற பார்மலின் தடவிய மீன்களை சாப்பிட்டால் வயிற்று வலி மற்றும் உடல் உபாதைகள் ஏற்படும் எனவும், தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் கூட உருவாக வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்களின் உடல்நலன் கருதி வியாபாரிகள் இதுபோன்ற ரசயானம் தடவிய மீன்களை விற்பனை செய்யக் கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
newstm.in