#BIG NEWS:- பொங்கல் பண்டிகைக்கு பின் முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு..!

#BIG NEWS:- பொங்கல் பண்டிகைக்கு பின் முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு..!

Update: 2022-01-06 15:07 GMT

கொரோனா மூன்றாவது அலை தொடங்கி விட்டதாக அறிவித்த தமிழக அரசு, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கையும் அறிவித்துள்ளது. இரண்டாவது அலையின்போது, தமிழகத்திலேயே கோவை மாவட்டம்தான் சென்னையை விட அதிகமான பாதிப்புக்குள்ளாகி வந்தது.

இன்னும் ஓரிரு வாரங்களில் கொரோனா பரவல் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறை கணித்துள்ளது. இதனால், தொழில் மற்றும் வர்த்தக வட்டாரங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா என்ற அச்சம் பரவிக்கொண்டிருக்கிறது.


முதல் கட்டமாக, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு மட்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அனைத்துத் தரப்பிலும் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது. ஆனால், பொங்கலை ஒட்டிய நாட்களில் கடை வீதிகளிலும், நிகழ்ச்சிகளிலும் கூடும் கூட்டங்களால் கொரோனா பரவல் மேலும் வேகமெடுக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதுமே இந்த நாட்களில் கடை வீதிகளில் கூட்டம் பெருமளவில் கூடும்; காணும் பொங்கலுக்கு சென்னை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் மக்கள் பெருமளவில் திரள்வர்.

மாட்டுப் பொங்கலை ஒட்டி, ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற நிகழ்ச்சிகள், தென் மாவட்டங்களில் அதிக அளவில் நடக்கும். இவற்றை அனுமதித்தால், கொரோனா பரவல் மிகவும் அதிகமாகும்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் இருப்பதால் மக்களிடம் ஏற்படும் அதிருப்தி தேர்தல் வெற்றியை பாதிக்கும் என்று ஆளும்கட்சி தரப்பில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

பொங்கல் வரை முழு ஊரடங்கை அமல்படுத்தாமல், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தி விட்டு, பொங்கலுக்குப் பின்னர் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக ஐஏஎஸ் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த சில நாட்களில், கொரோனா பரவல் மேலும் வேகமெடுக்கும் பட்சத்தில் இன்னும் கூடுதல் கட்டுப்பாடுகளை அரசு அறிவிக்கும் வாய்ப்பும் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Similar News