‘சி வோட்டர்’ கருத்துக்கணிப்பில் வெளியான அதிர்ச்சி செய்தி..!!
‘சி வோட்டர்’ கருத்துக்கணிப்பில் வெளியான அதிர்ச்சி செய்தி..!!
இந்திய நாடாளுமன்றத்தில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ஒன்றிய நிதியமைச்சர் பொருளாதார ஆய்வறிக்கையை நேற்று தாக்கல் செய்தார். அதில் நாட்டின் பொருளாதாரம் 2023-ம் நிதியாண்டில் 8 முதல் 8.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, நாடு தழுவிய கருத்துக்கணிப்பு ஒன்றை ‘சி வோட்டர்’ நடத்தியது. அந்த கருத்துக்கணிப்பின் முடிவு வெளியிடப்பட்டது. அதில் பொதுமக்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த கேள்விகளுக்கு பொதுமக்கள் அளித்துள்ள பதில்களை விரிவாக காணலாம்.
கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்ட விலையேற்றம் குறித்த கேள்விக்கு, பெரும்பாலானோர் (62.4% பொதுமக்கள்), மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர், நாட்டில் விலையேற்றம் கண்டு கொள்ளப்படாமல் உள்ளது என்று தெரிவித்துள்ளனர். பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.
அதேசமயம், 27.5 சதவீதத்தினர் விலையேற்றம் சரிசெய்யப்பட்டுள்ளது, விலை குறைந்துள்ளது என்று கூறியுள்ளனர். மீதமுள்ள 10.1 சதவீதத்தினர் விலையில் மாற்றமில்லை என்று கூறியுள்ளனர்.
பொருளாதார நடவடிக்கையில் ஒன்றிய அரசின் செயல்பாடு எதிர்பார்த்ததை விட படுமோசமாக உள்ளது என்று பெரும்பாலானோர் 38 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 36.4 சதவீதம் பேர் எதிர்பார்த்தது போல உள்ளது என்றும் 25.6 சதவீதம் பேர் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது என்றும் கூறினர்.
கடந்த ஓராண்டில் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட பணவீக்கத்தின் மோசமான தாக்கம் குறித்து கேட்டபோது, 49.3 சதவீதத்தினர் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக கூறினர். 42.3 சதவீதத்தினர் சிறிய பாதிப்பை சந்தித்துள்ளதாக கூறினர். 8.3 சதவீதம் பேர் பாதிக்கப்படவில்லை என கூறினர்.
அதேபோல கடந்த ஓராண்டில் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து கேட்ட போது, 42.4 சதவீதம் பேர் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம் மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 32.8 சதவீதம் பேர் வாழ்க்கைத் தரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் 24.8 சதவீதம் பேர் முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் கூறினர்.
அடுத்த ஓராண்டில், மக்களின் வாழ்க்கை தரம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, மூன்றில் ஒரு பங்கினர், 37.7 சதவீதத்தினர் மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றம் அடையும் என்று கூறினர். 31.3 சதவீதத்தினர் மோசமடையும் எனவும், 31 சதவீதம் பேர் மாற்றம் ஏதும் இருக்காது என்றும் கூறினர்.
அதேபோல, 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதாந்திர வருமானம் எவ்வளவு இருந்தால், சராசரி வாழ்க்கையை நடத்த போதுமானதாக இருக்கும் என்ற கேள்விக்கு, 28.4 சதவீதத்தினர் ரூ. 20 ஆயிரம் போதுமானதாக இருக்கும் என்று கூறி உள்ளனர். 20.9 சதவீதம் பேர் (ரூ.50,000 - ரூ.1 லட்சம்) வருமானம் சரியாக இருக்கும் என்று கூறினர். 16.8 சதவீதத்தினர் (ரூ.30 ஆயிரம் - ரூ.40 ஆயிரம்) வருமானம் போதுமானதாக இருக்கும் என்று கூறினர்.
அதேவேளையில், இந்த வருமானத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு, முக்கால்வாசி பேர் 83.3 சதவீதத்தினர் ‘ஆம்’ என்று கூறி உள்ளனர்.16.7 சதவீதம் பேர் மட்டுமே ‘வருமான வரிவிலக்கு அளிக்க வேண்டாம்’ என்று கூறினர்.
20 சதவீதம் பேர் தங்களின் வருமானம் அதே நிலையில் இருக்கிறது, ஆனால் செலவு அதிகரித்துள்ளது என்று கூறினர். 11.5 சதவீதம் பேர் வருமானம் அதிகரித்துள்ளது, செலவும் அதிகரித்துள்ளது என்று கூறி உள்ளனர்.
தினசரி செலவினங்கள் குறித்து கேட்ட போது, கடந்த ஆண்டு நிலைமையை ஒப்பிடுகையில், தினசரி செலவை எதிர்கொள்வது சிரமமாக உள்ளது என்று 65.4 சதவீதம் பேர் கூறினர். 26.9 சதவீதம் பேர் தினசரி செலவினங்கள் அதிகரித்துள்ள போதும் அதனை சமாளிக்க முடிகிறது என்று கூறி உள்ளனர்.