பூட்டிய கடையின் ஷட்டர் உடைப்பு.. ரூ.2 கோடி மதிப்பிலான கடிகாரங்கள் திருட்டு..!

பூட்டிய கடையின் ஷட்டர் உடைப்பு.. ரூ.2 கோடி மதிப்பிலான கடிகாரங்கள் திருட்டு..!

Update: 2022-01-09 17:08 GMT

பூட்டிய கடையின் ஷட்டரை உடைத்து ரூ.2 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூரு புலிகேசி நகரைச் சேர்ந்தவர் சாமோயில். இவர், இந்திராநகர் 100 அடி சாலையில் சிம்சன் டைம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கைக்கடிகாரம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் விலை உயர்ந்த கடிகாரங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், சம்பவத்தன்று வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சாமோயிலும் ஊழியர்களும் வீட்டிற்குச் சென்று விட்டனர். நள்ளிரவில் அந்த கடைக்கு வந்த மர்ம நபர்கள், கடையின் ஷட்டரை உடைத்து கடைக்குள் புகுந்தனர்.

பின்னர், கடைக்குள் இருந்த கண்ணாடி அலமாரிகளை உடைத்த மர்ம நபர்கள், அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த 129 ரேடோ, 29 லோங்கினீஸ், 13 ஒமேகா என விலை உயர்ந்த கடிகாரங்களை திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பது பற்றி சாமோயிலுக்கு, கடையின் அருகே வசித்து வரும் மக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கடைக்கு வந்த சாமோயில், கடிகாரங்கள் திருடப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் இந்திரா நகர் போலீசார் சம்பவம் நடந்த கடைக்கு விரைந்து சென்று சாமோயிலிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கடையில் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த கடிகாரங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 

இந்த திருட்டுச் சம்பவம் குறித்து சாமோயில் அளித்த புகாரின் பேரில் இந்திரா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Similar News